அகமதாபாத்: ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 184 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐ.பி.எல். தொடங்கியதிலிருந்து ஆடி வரும் பெங்களூரு அணி முதன் முதலாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விராட் கோலியின் 18 ஆண்டுகால கனவு நனவானது. பெங்களூரு அணியில் 35 பந்துகளில் 43 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார் கோலி. பஞ்சாப் அணியில் சஷாங்சிங் 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தும் பயனில்லாமல்போனது. ஐ.பி.எல்-ல் முதல் முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதால் அணி வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதலமைச்சர் வாழ்த்து
சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தருணத்துக்காக காத்திருந்த விராட் கோலிக்கு வாழ்த்து. நீண்டகால கனவை சுமந்து வந்த விராட் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானதாக இருக்கும். அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் திரும்பும் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.