சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என ஆந்திர மாநில தலைவர் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் கிடுகு ருத்தர ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கிடுகு ருத்தர ராஜு பேசியதாவது: 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். ஆந்திர மாநில மக்களுக்கு மீண்டும் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில் தான். ஆகவே வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கப்படும். அதேபோல் ராயல சீமா மற்றும் கடப்பா மாவட்டங்களுக்கு சிறப்பு பேக்கேஜ் வழங்கப்படும். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஆந்திர மாநிலத்திலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.