சேலம், செப்.9: சேலம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை பரவலாக மழைபெய்தது. அதிகபட்சமாக இடைப்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் சேலம் உள்பட பல பகுதிகளில் நேற்றுமுன்தினம் மதியம் 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. இம்மழை சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது.
மழையால் சேலத்தில் கிச்சிப்பாளையம் மெயின்ரோடு, கருவாட்டு பாலம், சித்தேஸ்வரா, நாராயணநகர், களரம்பட்டி, கருங்கல்பட்டி, குகை, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக இடைப்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேலம் 33.20, சங்ககிரி 29.10, தலைவாசல் 22, ஏற்காடு 15.40, பெத்தநாயக்கன்பாளையம் 14, ஆணைமடுவு 11, மேட்டூர் 10.80, கெங்கவல்லி 10, ஓமலூர் 9.40, ஆத்தூர் 3.60 என மொத்தம் 202.50 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.