டெல்லி: புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14லட்சம் கோடி ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
கடந்த மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆர்.பி.ஐ. அறிவித்திருந்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஒருவர் 20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் அதற்கு அடையாள ஆவணமோ, சீட்டோ தேவையில்லை என ஆர்.பி.ஐ. தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி திரும்பப் பெறப்பட்ட 2 ஆயிரம் நோட்டுகளின் மொத்த மதிப்பு 2.72 லட்சம் கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று ஆர்.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
“புழக்கத்திலுள்ள 2 ஆயிரம் நோட்டுகளில் 88 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஜூலை 31ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. 2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம்” என ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.