பாராமவுன்ட்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று லாஸ்ஏஞ்சல்ஸில் சட்ட விரோத குடியேற்றவாசிகள் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை விரட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போதும் கலையாத மக்கள் போலீசாருன் இடையே பயங்கர மோதல் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் 2வது நாளாக லாஸ் ஏஞ்சல்ஸின் பாரமவுன்ட் பகுதியில் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 400க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கலைக்க முற்பட்டனர்.
அப்படி இருந்தும் பல இடங்களில் இருதரப்புக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் தவறிவிட்டதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 2,000 பேரை லாஸ் ஏஞ்சல்சுக்கு அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார்.இதற்கு கவர்னர் கவின் நியூசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.