திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலையில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அரசு வழங்குகிறது. மேலும், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 1900 கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று 200 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்வரிசை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர் தர்ப்பகராஜ் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களின் நலனில் அக்கறைக் கொண்டு, அவர்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மேலும், பெண் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு, உயர்கல்வி, திருமணம், திருமணத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு என பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இத்திட்டங்கள் இந்திய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. எனவே, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என பாகுபாடு பார்க்காமல், அனைத்து குழந்தைகளையும் சமநிலையில் கருத வேண்டும். அறிவியல்பூர்வமாக ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு அதிக திறன்கள் உள்ளன. பெண்களுக்கு இயல்பாகவே அனைத்தையும் புரிந்துகொள்ளும் திறனும், ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறனும் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும் கல்வியையும் வழங்க அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டும். பெண்கள் படித்தால் தான் சமுதாயம் முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் மீனாம்பிகை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


