சேத்தியாத்தோப்பு, நவ. 17: பின்னலூர் பகுதியில் 200 ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் பகுதியில் 200 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையின் மேற்கு பகுதியில் சூடாமணி ஏரி உள்ளது. இந்த ஏரியின் மேற்கு பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இந்த விளைநிலங்களின் மேற்கே உள்ள பெரிய நெல்லிக்கொல்லை, துரிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு, எறும்பூர், உள்ளிட்ட கிராம பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வடிகாலான மழைநீர் பின்னலூர் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் செல்லும் நீர்வழி பாதைகள் தூர்ந்துபோய் உள்ளதால் மழைநீர் வடியாமல் வயலில் தேங்கி நிற்கிறது. மேலும் அருகில் உள்ள சூடாமணி ஏரி தூர்ந்துபோய் உள்ளதால் வயலில் தேங்கி நிற்கும் மழைநீரை உள்வாங்காமல் உள்ளது, என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி மழை வெள்ளநீரை தேக்கி வைத்தது போக, உபரியாக செல்லும் மழைநீரை தேக்கம் இன்றி வாலாஜா ஏரியில் வடிய வைக்குமாறு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமான நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.