கும்மிடிப்பூண்டி, அக். 20: கும்மிடிப்பூண்டி சிப்காட்டியில் வட மாநில வாலிபர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இங்குள்ள, சில தொழிற்சாலைகளில் 12 முதல் 16 மணி நேரம் வரை கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், வட மாநில வாலிபர்கள் சோர்வாகி அடிக்கடி பணி நேரங்களில் மயங்கி விழுந்து பலியாகும் தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள அலுமினியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் (24) என்ற வெல்டிங் தொழிலாளி பணியாற்றி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர், 20 அடி உயரத்தில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ரோஹித் கீழே விழுந்தார். இதில், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று ரோகித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிப்காட் பாதுகாப்பு துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். உயிரிழந்த ரோஹித் குடும்பத்திற்கு நஷ்டஈடாக கணிசமான தொகையை வாங்கி தர வேண்டுமென சிப்காட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.