*பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள்
பாலக்காடு : பாலக்காடு அருகே கோயில் திருவிழாவில் மூதாட்டியிடம் செயினை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு அடுத்த புதுச்சேரி பகுதியில் குரும்பா பகவதி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் திருவிழா கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திருவிழாவில் கஞ்சிக்கோடு, வாளையார், புதுச்சேரி, கல்லேப்பிள்ளி மற்றும் பாலக்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் திரளாக அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது, கோயில் வளாகத்தில் கூட்டநெரிசல் அதிகளவில் இருந்தது.
அப்போது அங்கு வந்திருந்த புதுச்சேரி வேங்காடியைச் சேர்ந்த வெள்ளக்குட்டி (65) என்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கசங்கிலியை 2 பெண்கள் திருடி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி வெள்ளக்குட்டி புதுச்சேரி கசபா போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அப்போது தமிழகத்தை சேர்ந்த சேலம் ரயில்வே நிலையம் புறபோக்கு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (43), ராஜேஸ்வரி (30) ஆகிய 2 பெண்கள் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் இருவரையும் ைகது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் கேரளாவில் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.