நெல்லை, ஆக. 28: நெல்லை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் கனகராஜ் (25). கூலித் தொழிலாளியான இவருக்கும், அத்தை மகளான குருக்கள்பட்டி அடுத்த கருத்தானூரை சேர்ந்த கவிக்குயில் (20) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கவிக்குயில் வீட்டிற்கு அவரது முன்னாள் காதலன் வெங்கடேஷ் வந்துள்ளார்.
இதைப் பார்த்த கனகராஜின் தந்தை நடராஜன், வெங்கடேசை அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்து மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தகவலறிந்து கவிக்குயில் தாய் முத்துமாரி (50), அண்ணன் அன்பரசு (25) ஆகியோரும் அங்கு வந்தனர். அப்போது வெங்கடேசுக்கும், அன்பரசுக்கும் வாக்குவாதம் முற்றியது. உடனே அன்பரசு, வெங்கடேசை கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்.
இதில் அவரது இடது கை மணிக்கட்டு துண்டானது. மேலும் முகத்திலும் வெட்டி விட்டு அன்பரசு, அவரது தாய் முத்துமாரி, கனகராஜ், அவரது தந்தை நடராஜன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். முன்னாள் காதலனை ரத்த வெள்ளத்தில் பார்த்த கவிக்குயில் அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். அவரை சுரண்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வந்தார். நேற்று கனகராஜ் தந்தை நடராஜன், கவிக்குயில் தாய் முத்துமாரி ஆகிய இருவரையும் ஊத்துமலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கனகராஜ், அன்பரசு ஆகியோரை தேடி வருகின்றனர்.