புதுடெல்லி: இன்னும் 2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி கூறினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், இடது சாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன்,ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும். ஒடிசா,பீகார்,மபி, சட்டீஸ்கார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், அமித் ஷா பேசுகையில்,‘‘ இடது சாரி தீவிரவாதம் எந்த விதத்தில் இருந்தாலும் அதனை அடியோடு நசுக்குவோம். 2 ஆண்டுகளில் இடது சாரி தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்’’ என்றார். இதுகுறித்து உள்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இடது சாரி தீவிரவாதத்துக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைள் காரணமாக கடந்த 2010 ல் இருந்ததை விட 2022ல் இடது சாரி தீவிரவாத சம்பவங்கள் 77 சதவீதம் குறைந்துள்ளன. அதே போல்,தாக்குதல்களில் உயிரிழப்பும் 2022ல் 90 சதவீதம் குறைந்து விட்டன’’ என்றனர்.