திருவையாறு : காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருவையாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன்குமார் (14). திருவையாறில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். திருவையாறு ராஜாநகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிபிரசாத் (15). கரந்தையில் தனியார் பள்ளியில் 10ம்வகுப்பு படித்து வந்தான். நண்பர்களான இருவரும் நேற்று காலை திருவையாறு 15வது மண்டப தெரு ஐயப்பன் கோயில் பின்புறம் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் குளித்து கொண்டிருந்தனர்.
தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் திடீரென இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆற்றில் இறங்கி மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது புஷ்யமண்ட படித்துறை எதிரே காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் இருவரும் இறந்த நிலையில் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். திருவையாறு போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவையாறில் காவிரி ஆற்றில் 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.