*உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஆற்காடு : ஆற்காட்டில் தடை செய்யப்பட்ட 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அதனை தடை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல் ஆற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆற்காடு பஜார் வீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் பயன்படுத்துவதாகவும், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் வெங்கட்ட லட்சுமணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி, மேற்பார்வையாளர் கேசவன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் பஜார் வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது விற்பனைக்கு பதுக்கிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதைக் கண்டு அதனை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மொத்தம் 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மீண்டும் இது போன்று பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.