விகேபுரம் : பாபநாச சுவாமி கோயில் முன்பு தாமிரபரணி ஆற்றில் ஆடி, தை, மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருவார்கள். ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியமான அமாவாசை ஆகும். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாபநாசத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய பின்னர் தங்களது முன்னோர்களுக்கு எள், அரிசி ஆகியவை கொண்டு தர்ப்பணம் செய்தனர். பாபநாசம் படித்துறை, கோயில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலையில் இருந்தே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நதிக்கரையில் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.
இந்நிலையில் பாபநாசத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி உத்தரவின்படி, விகேபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரன் வழிகாட்டுதலின்படி, சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். அப்போது பக்தர்கள் விட்டுச் சென்ற பரிகார பொருட்கள், அன்னதான இலைகள், காலியான தண்ணீர் பாட்டில்கள், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர கழிவுகள் என மொத்தம் சுமார் 2.4 டன் அளவுள்ள கழிவுகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.
இவற்றில் மறுசுழற்சி செய்யக்கூடிய 470 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி உரக்கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பிஎல்டபிள்யூஏ மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.