வேலூர், செப்.14: ஊரக வளர்ச்சி துறை பணிகள் தொடர்பாக 2 வாரத்திற்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர், திட்ட இயக்குனர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் வளர்ச்சி திட்டங்களின் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டங்களில் தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்கள் இடைவிடாது நடத்தப்படுவதால் கள அளவில் பணியில் கவனம் செலுத்தி பணி முன்னேற்றத்தினை உறுதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தொடர்ச்சியாக இடைவிடாத ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து 2 வாரத்திற்கு ஒருமுறை அனைத்து திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டத்தினை நடத்த வேண்டும். மேலும் ஆய்வுக்கூட்டத்தினை இரவு வரை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.