நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப் படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரியாகவும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கில் இருந்து வீசும். அதன் வேகம் மணிக்கு 14 கி.மீ., என்றளவில் வீசும். காற்றின் ஈரப்பதம் 40 முதல் 80 சதவீதமாக நிலவும்.
பருவமழை காலங்களில் கோழிப்பண்ணையாளர்கள் தாங்கள் வாங்கும் தீவன மூலப்பொருட்களில் ஈரப்பதம் மற்றும் ஆப்ளா டாக்சின் நச்சினை ஆய்வுசெய்து, கொள்முதல் செய்யுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் தீவன மூலப்பொருட்களை நல்ல காற்றோட்டம் உள்ள ஈரப்பதம் அண்டாத பகுதிகளில் சேமித்து வைக்கவேண்டும். பருவமழை காலங்களில் மழைநீர் கொட்டகையினுள் புகுவதால், கோழி எருவில் ஈக்களின் புழுக்கள் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் உள்ள எருவை அவ்வப்போது அகற்றவேண்டும்.
அவ்வாறு முடியாத பட்சத்தில், அதற்குரிய மருந்தினை கோழி எருவின் மேலே தெளிக்கவும் அல்லது கோழித் தீவனத்தில் கலந்து கொடுக்கவேண்டும். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலை நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணையை சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும்.
மேலும், உயர்மனைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும். பொதுவாக மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் குடற்புழுக்களின் நோயை உண்டாக்கும். இளநிலை பருவ புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப் படுவதால், குறிப்பாக செம்மறி ஆடுகளில், உருளைப் புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், ஆடுகளுக்கு சாணப் பரிசோதனை செய்து, உருளைப் புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால், குடற்புழு நீக்கம் செய்யலாம்.