கிருஷ்ணகிரி, ஆக.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு கடத்துவதற்காக வீடு மற்றும் காரில் பதுக்கிய 2.1 டன் ரேஷன் அரிசி, கார் உள்ளிட்ட 2 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்2 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை தாசினாவூர் கிராமத்தில், ராமசந்திரன் என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்.ஐ கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டில் தாசினாவூர், மகாராஜகடை பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 12 பைகளில் வைத்திருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கி வந்த பெரியதம்மாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(23), முனீந்தர்ராஷ்(18) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அரிசி வாங்கி வர பயன்படுத்திய டூவீலரரை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பர்கத் என்பவரை தேடி வருகின்றனர். இந்த குழுவினர், ஓசூர் அடுத்த மத்திகிரி அருகே, சிப்பாய்பாளையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில், தலா 50 கிலோ எடை கொண்ட 30 பைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். மத்திகிரி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவுக்கு கடத்த வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், காரின் உரிமையாளரான மத்திகிரியை சேர்ந்த சையத் வஜீர் என்பவரது மனைவி பிரசன்னாதாஜ் மற்றும் டிரைவர் சையத் சபீர் ஆகியோரை தேடி வருகின்றனர்.