திருவாரூர், செப்.5: தமிழக அரசின் உத்தரவுபடி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சாரு மற்றும் எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு நடத்தினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களிடையே நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்திட கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அரசின் தலைமை செயலாளர் மற்றும் சுகாதார துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையினை சுற்றியும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தவேண்டும், உயர்கோபுர மின்விளக்குகளை அமைத்திட வேண்டும், குறிப்பாக போலீஸ் உதவிமையம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அரசின் உத்தரவின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் உதவி மையம் மற்றும் மின்விளக்குகள் வசதி போன்றவை குறித்து நேற்று கலெக்டர் சாரு மற்றும் எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு நடத்தினர். இதில் டீன் ஜோசப்ராஜ், டி.எஸ்.பி மணிகண்டன், ஆர்.டி.ஒ சௌம்யா, மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய துணை மருத்துவர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.