கோவை, அக். 31: கேரளா மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்துவ மாநாடு, வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிபன் பாக்ஸ் வெடி குண்டு வெடித்தது. மக்கள் கூட்டம் மிகுந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்தது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உஷார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து சர்ச்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நகரில் போலீசார் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர், மாவட்டங்களில் சுமார் ஆயிரம் போலீசார் இரண்டாவது நாளாக நேற்றும் கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மசூதிகள், கோயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பார்சல் மற்றும் வளாக பகுதியில் மோப்ப நாய், வெடி குண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மூலமாக சோதனை நடக்கிறது. மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் அலார்ட் உத்தரவு பின்பற்றப்படுகிறது.
மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் பஸ் ஸ்டாண்ட்கள், பொது இடங்களில் ரோந்து, வெடி பொருட்கள் கண்டறியும் சோதனையில் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள சம்பவத்தை தொடர்ந்து கோவையில் பதட்ட சூழல் உருவாகி விட்டது. மாவட்ட எல்லையான வாளையார், வேலந்தாவளம், கோபநாரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் 24 மணி நேர கண்காணிப்பு பணி நடக்கிறது. சந்தேக நபர்களின் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படுகிறது.