குடியாத்தம் ஜூலை 21: குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையோரம் 130 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், குடோன்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்த 1,250 வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. மேலும், மீதமுள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக 130 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடியாத்தம் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.