Wednesday, February 28, 2024
Home » 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கியது: 56 அடி ஆழத்தில் நடைபெறுகிறது

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கியது: 56 அடி ஆழத்தில் நடைபெறுகிறது

by Ranjith

 

சென்னை, ஜன.1: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மிகவும் சவாலான சுரங்கப் பாதை பணியாக கருதப்படும், அடையாறு ஆற்றின் கீழே 56 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.) வரையிலான 3வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 28 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த வழித் தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியிலிருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த பிப். 16ம் தேதி தொடங்கியது. இதில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’, 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான `அடையாறு’ ஆகியவை அடுத்தடுத்து பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் டிபி சாலைக்குக் கீழே சுரங்கப் பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்தை சென்றடைய உள்ளன.

முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம் ) மூலமாக, இதுவரை 583 மீட்டர் சுரங்கப் பாதையும், 2வது இயந்திரம் மூலமாக, இதுவரை 250 மீட்டர் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் பல்வேறு கட்டமாக நகர்ந்து வரும் நிலையில், `காவிரி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், அடையாறு ஆற்றுப் படுகையை நேற்று முன்தினம் அடைந்தது. தொடர்ந்து, அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை பணியை தொடங்கியது. அடுத்த ஒன்றரை மாதங்களில் ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பை அடைய உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

14 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi