சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிகவின் 19ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு செப்டம்பர் 14ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் தொடக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும். தேமுதிக தொடக்க நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றுவதோடு, நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஒருங்கிணைந்த மாவட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 4 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொள்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் அவைத்தலைவர் வி.இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் விஜய பிரபாகரன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர் அணி செயலாளர் நல்லத்தம்பி, சென்னை மாவட்டத்தில் இளைஞர் அணி துணை செயலாளர் எம்.வி.எஸ்.ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தொண்டர் அணி செயலாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதேபோல மற்ற மாவட்டங்களில் கலந்துகொள்வோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.