சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, மாவட்டங்களில் உரிய பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 22 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடந்த மாதம் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கு பெரிய அளவில்சேதம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை, அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலோண்மை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், 22 மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, விருதுநகர், மதுரை, திருச்சி, திருப்பத்தூர், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அந்தந்த மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மிக கனமழையை சமாளிக்க தேவையான நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும். மேலும், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதாவது நடந்தால் உடனடியாக இந்த அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.