தஞ்சாவூர், செப்.3: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. இதில் அருமலை கோட்டை தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில், ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, கலியபெருமாள், ஜேம்ஸ், பனை விதை தங்கராசு ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கடந்த 1960 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ராசிமணல் அணைத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 10 டிஎம்சி தண்ணீர் வரை குழாய்கள் வழியாக கர்நாடகம் கொண்டு செல்லலாம்.
இதன் மூலம் தமிழகம், கர்நாடகம் என இரு மாநில மக்களின் எதிர்கால குடிநீர் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். இத்திட்டம் மூலம் கடலில் வீணாகி போய் கலக்கும் உபரி நீரையும் தேக்கி வைத்து பயன்படுத்தலாம். இத்திட்டத்தை மிகச் சிறந்த திட்டமாக நெற்களஞ்சிய விவசாயிகள் கருதுகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை வேளாண்துறை அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ராசி மணல் அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.