ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா நடராஜன்(50). இவர், ஓசூர் உழவர் சந்தை சாலையில் முட்டை கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா நடராஜனுக்கு சென்னை வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸில் சென்னை எக்மோர் பகுதியில் மகாதேவ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நீங்கள் உரிமையாளர். இந்த நிறுவனம் பிப்ரவரி 2023ம் ஆண்டு ரூ.6,902 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. அதற்கான ஜிஎஸ்டி வரி ரூ.1,932 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸை பார்த்த முட்டை வியாபாரி ராஜா நடராஜன், அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் பணம் வேண்டி தனது மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார். அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக உங்கள் குடும்பத்தினர் பல லட்சம் ரூபாய் வரி கட்டுவதாகவும், தொழில் நிறுவனம் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சியடைந்தார். தனது மனைவியின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மனு நிராகரிப்புக்கும், ஏற்கனவே வணிக வரித்துறையில் இருந்து வந்த நோட்டீசுக்கும் சம்பந்தம் இருப்பதாக அதன்பிறகே உணர்ந்தார்.
இதையடுத்து, ஓசூர் பகுதியில் உள்ள வணிக வரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து ராஜா நடராஜன் கூறுகையில், ‘நான் ஓசூரில் முட்டை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு கம்பெனி எதுவும் இல்லை, வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால், நான் கம்பெனி நடத்தி வருவதாகவும், அதில் ரூ.6,902 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும், வர்த்தகத்திற்கு ரூ.1,932 கோடி ஜிஎஸ்டி வரி வந்துள்ளதாகவும் நோட்டீஸ் வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்’ என்றார்.