நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேலும் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை காணப்படுகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டன. மாவட்டத்தில் வீடுகளும் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்கள் முறிந்ததால் பல இடங்களிலும் தொடர்ந்து மின்தடைகள் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக அடையாமடையில் 78.2 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேலும் 17 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. இதுவரை மொத்தம் 40 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 37.87 அடியாகும். அணைக்கு 1397 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 42.55 அடியாகும். அணைக்கு 1081 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 22 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 5.58 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 185 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 5.67 அடியாக நீர்மட்டம் உள்ளது.
அணைக்கு 295 கன அடி தண்ணீர் வந்து பத்துகாணியில் 7 மரங்கள் சாய்ந்தன
அருமனை: பத்துகாணி பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் ராட்சத மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்தது. அதேபோல் சுகாதார நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் ரப்பர் மரம் முறிந்து மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. மேலேகற்றுவா பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பெரிய பலா மரம், கொண்டகட்டி பகுதியில் இரண்டு கிராம்பு மரங்கள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்தது. முல்லப்பூகாணி பகுதியிலும், கற்றுவா பகுதியிலும் வீடுகள் மீது மரம் விழுந்து சேதமடைந்தது.
சானல்கரை பகுதியில் மின்சார கம்பிகள் மீது ரப்பர் மரம் விழுந்தது. மரங்கள் விழுந்ததால் பத்துகாணி சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மின் ஊழியர்கள் வராததால் பொதுமக்களே இணைந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மருதம்பாறை மற்றும் சில இடங்களில் மின் ஊழியர்கள் அறுந்த மின்கம்பிகளை சரிசெய்ததால் மின் வினியோகம் தற்போது துவங்கியுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் சரி செய்தால் மற்றொரு இடத்தில் மரம் விழுந்து மின்கம்பிகளை துண்டித்து விடுவதால் மின்ஊழியர்கள் திணறி வருகின்றனர்.