திருவள்ளூர்: திருவள்ளூர் தனியார் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மகளிர்க்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 181 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பில் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் திருத்தணி எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், சமூக நலத்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பிற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும், பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் மேற்கொண்டு வருகிறோம். குழந்தைகளுக்கான உதவி எண்: 1098, பெண்களுக்கான உதவி எண்: 181, வலைத்தள பாதுகாப்பு எண்: 1930, கல்வி உதவி வழிகாட்டி எண்: 14417, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மேற்காணும் இலவச உதவி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தினை உறுதி செய்யலாம்.
இதனை மையப்படுத்தி பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 10 ஆண்டுகள் நிறைவுப் பெற்றதற்கான நிகழ்ச்சியுடன் மகளிருக்கான திருமண நிதியுதவி திட்டத்தில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.2024-2025ம் நிதியாண்டிற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 181 பயணிகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான 1.45 கிலோ கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.74 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டது. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, சிறப்பாக முறையில் கண்காணிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.