திருச்சி, ஜூன் 24:திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.13.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை அவயங்களை 18 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளா் நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 828 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹.13.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை அவயங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் முகாம் மக்களுக்காக நடத்தப்பட்ட திறன் பயிற்சியில் கலந்து கொண்டு தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், டிஆர்ஓ ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் நல்லையா, துணை கலெக்டர் ஹென்றி பீட்டா் (வருவாய் நீதிமன்றம்), துணை கலெக்டர் (அகதிகள் முகாம்) நஜிம் முனிசா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் ஜெயசித்ரகலா, மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் ரெங்கராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.