அருப்புக்கோட்டை: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சிறுவனுடன் நெருங்கி பழகியதால் 18 வயது இளம்பெண் கர்ப்பமானார். அவமானம் தாங்காது விஷம் குடித்ததில் தாய் பலியானார். மகள் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கும், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த மார்ச் மாதம் காரியாபட்டி அருகே தனது அக்கா வீட்டிற்கு சிறுவன், மாணவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் ஆனார். இதையடுத்து, சிறுவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கு சிறுவன் சம்மதிக்கவே, கல்லூரி படிப்பை நிறுத்திய மாணவி, மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் தங்கி பயிற்சி அலுவலர் படிப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 23ம் தேதி விடுமுறையில், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த தந்தையிடம் மாணவி நடந்ததைக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கண்டித்துள்ளார். இதையடுத்து, தந்தையுடன் வீட்டுக்குச் சென்ற மாணவி, சிறுவனிடம் விரைவில் தன்னை திருமணம் செய்து கொள்ள கெஞ்சியுள்ளார். அப்போது சிறுவன் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதிய மாணவியும், அவரது தாயாரும் விஷம் குடித்தனர். இதில், மயங்கிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாய் இறந்தார். மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர்.