ஓசூர், நவ.8: ஓசூரில் 17 டன் ரேஷன் அரிசியை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வழியாக, லாரியில் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கடத்தப்படுவதாக ஓசூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஓசூர் போலீசார் சீதாராம் நகர், முல்லைநகர், ஜூஜூவாடி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை கடத்தி வரும் லாரியை கண்காணிக்க ஓசூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சீதாராம் நகர் பகுதியில் வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக லாரியை ஓட்டி வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராம்கி(40) என்பவரிடம் விசாரித்தபோது, விழுப்புரம் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, ராம்கியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 17 டன் அரிசியுடன், லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.