சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் வருகிற 17ம் தேதி திமுக முப்பெரும் விழா நடக்கிறது. இதில் ஜெகத்ரட்சகன் எம்பி, இயற்கை விவசாயி பாப்பம்மாள் உள்ளிட்ட 5 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு திமுக பவள விழா ஆண்டு திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இந்த முப்பெரும் விழா வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. திமுக முப்பெரும் விழாவினையொட்டி விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
அதன் விவரம்: 2024ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது-பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது- அறந்தாங்கி மிசா இராமநாதன், கலைஞர் விருது- எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது- கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது- வி.பி.இராஜனுக்கும் வழங்கப்படும்.
பத்ம விருது பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான 105 வயதான பாப்பம்மாளுக்கு திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக முப்பெரும் விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.