ஐதராபாத்: ஐதராபாத் சார்மினார் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே கிருஷ்ணா பேர்ல்ஸ் குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக காலை 6.30 மணியளவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர், பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி உள்ள சிலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் சார்மினார் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்ததில் 17 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.