*அதிகாரிகள் நடவடிக்கைக்கு பக்தர்கள் கோரிக்கை
காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த வைகுந்த வாசப் பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த வைகுந்த வாசப் பெருமாள் கோயில். சுமார் 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் கருவறையில் வைகுந்த வாசப் பெருமாள் தேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
இந்நிலையில், தற்போது இக்கோயிலில் ஒருகால் பூஜைகள் இன்றி கோயில் வளாகத்தில் முட்புகதர்கள் மண்டி மதில் சுவர் மற்றும் முகப்பு வாயில் சிதிலமடைந்து காணப்படுகிறது.இதேபோல் மூலவரின் ராஜகோபுரமும் உரிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கோயிலில் விளக்குகள் கூட எரியாமல் இருளில் முழ்கி வருகிறது.
மேலும் இக்கோயிலுக்கு என்று அதேப் பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கோயிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளார்களாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து புனரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.