சேந்தமங்கலம், மே 24: எருமப்பட்டி அருகே 17 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த பாலாயி அம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் தேவராயபுரத்தில் பாலாயி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில், திருவிழா நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருவிழா கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊர் மக்கள் ஒன்று கூடி, திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி, திருவிழா நடத்துவதற்காக நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில், இருந்தும் புளியஞ்சோலை ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் குடங்களில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நேற்று மாலை செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சக்தி அழைத்தல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முனியப்பன் வீதி உலா பூஜை நடைபெறுகிறது. 28ம் தேதி பாலாயி அம்மன் தேர் திருவிழா, மாவிளக்கு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலில் ஒன்று கூடி வழிபாடு நடத்தினர். எருமப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.