ஓசூர், ஜூலை 8: சூளகிரி சின்னாறு அணையில் இருந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 14 கிராமங்களில் உள்ள 871 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை ஆதாரமாக கொண்டது சூளகிரி சின்னாறு அணை. இந்த அணை கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, தமிழக முதல்வருக்கு, விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, நேற்று சின்னாறு அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களின் வழியாக, பாசனத்துக்கு விநாடிக்கு 17 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 120 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ, சப்கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜை செய்து,பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவி வரவேற்றனர். சூளகிரி சின்னாறு அணை 32.80 அடி கொண்டுள்ளது. தற்போது 32.64 அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். சின்னாறு அணையில் இருந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால்,மாரண்டப்பள்ளி பஞ்சாயத்து, சென்னப்பள்ளி பஞ்சாயத்து மற்றும் இம்மிடிநாயக்கனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்டபட்ட பெல்லப்பள்ளி, கீழ்முரசப்பள்ளி உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதியை பெறும்.
கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் நிலத்தடி நீர் மூலம் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால், கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்வதுடன், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையும் பூர்த்தியடையும். சின்னாறு அணை பாசன பகுதியில் நெல், அவரை, துவரை, கத்திரி, வெண்டை, முட்டைகோஸ், பீட்ரூட் உள்ளிட்ட பணப்பயிர்களும், தென்னை,வாழை, மாமரங்கள் ஆகிய தோப்பு வகை மரங்களும் அதிகம் உள்ளன. இப்பகுதியில் விளையும் கொத்தமல்லி தழை, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா ேபான்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர, தாஜ்மஹால், வெள்ளை ரோஜா, கிராண்ட் காலா, சிகப்பு ரோஜா, சாமந்தி, முல்லை மற்றும் அரளி போன்ற பூ வகைகளையும் இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்தின் உள் மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்துக்கும் தினந்தோறும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மலர் வகைகளும், காய்கறி வகைகளும் பயிரிட உதவியாக இருக்கும். திமுக அரசால் முதன்முறையாக சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இங்குள்ள 3 பஞ்சாயத்தில் உள்ள 14 கிராமங்கள், பாசன வசதி பெறுவதால், இப்பகுதி பசுமை நிறைந்த பூமியாக விளங்கும். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்,’ என்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், நாகேஷ், நீர்வளத்துறை உபகோட்ட பொறியாளர் உதயகுமார், அணை பொறியாளர் பார்த்தீபன், உதவி பொறியாளர்கள் ராதிகா, சிவசங்கர், பொன்னிவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.