ராமேஸ்வரம், ஆக. 17: ராமேஸ்வரத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நாளை (ஆக. 18) நடக்கிறது. ராமேஸ்வரத்தில் தமுஎகச ராமேஸ்வரம் கிளை சார்பில் பொன்விழா கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. இதில் தமுஎகச முன்னோடிகள் கவுரவிப்பு, இரவை அதிர வைக்க திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, நாட்டு நடப்பை நையாண்டியாக பேச, சிந்திக்க வைக்க, புதுகை பூபாளம் கலைக்குழு, என்னமோ நடக்குது, எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்னும் தலைப்புகளில் உரை வீச்சு, முகவை கலைக்குழுவின் ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என விடிய விடிய தொடர் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சிறப்பு பேச்சாளர்கள் மதுக்கூர் இராமலிங்கம், நந்தலாலா மற்றும் எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான வேல.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கிளைத் தலைவர் ராமச்சந்திர பாபு, செயலாளர் மோகன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.