சுக்மா: சட்டீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதி. இந்த நிலையில் சுக்மா மாவட்டம், சிந்தல்நார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கெர்லாபெண்டா என்ற கிராமத்தை சேர்ந்த 9 பேர் உட்பட 16 நக்சலைட்டுகள் நேற்று போலீசில் சரணடைந்தனர். அவர்களில் ரீட்டா என்ற தோடி சுக்கி (36) என்ற பெண் நக்சலைட்டும் சரணடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் நக்சலைட் சித்தாந்தங்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக போலீசில் சரணடைந்துள்ளனர் என்று சுக்மா மாவட்ட எஸ்பி கிரண் சவான் தெரிவித்தார்.
ரீட்டா மற்றும் ராகுல் புனேம்(18) ஆகிய இருவரின் தலைக்கும் தலா ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. கெர்லாபெண்டா கிராமத்தில் இருந்து மட்டும் 9 பேர் சரணடைந்துள்ளனர். இதனால் அந்த கிராமம் முற்றிலும் நக்சலைட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் படேசட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 11 நக்சலைட்டுகள் சரணடைந்தனர். இதனால் அந்த கிராமம் நக்சலைட்டுகள் இல்லாத கிராமம் என அறிவிக்கப்பட்டது. சட்டீஸ்கர் பாஜ அரசின் புதிய கொள்கையின்படி முற்றிலும் நக்சலைட்டுகள் இல்லாத கிராமத்திற்கு ரூ.1 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.