திருச்செங்கோடு, ஆக.29: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 16,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். திருச்செங்கோடு தாலுகா, தேவனாங்குறிச்சி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடந்தது. ஈஸ்வரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 703 பயனாளிகளுக்கு ₹5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கலெக்டர் உமா பேசியதாவது:
aதமிழக முதல்வர் ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி ₹3.50 லட்சம் வழங்கி உள்ளார். இத்திட்டத்தின் கீழ், மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 6,500 பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள 560 பயனாளிகளுக்கு, அடுத்தாண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்ட ஆணை வழங்கப்படும். நம் மாவட்டத்தில் 2021 முதல் தற்போது வரை 3 ஆண்டுகளில், சுமார் 16,800 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ₹1.50 லட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தில் 18,651 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 12,796 மாணவர்களும் மாதம் ₹1,000 பெறுகின்றனர். மாவட்டத்தில் நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 95 சதவீதம் மனுக்கள் மீது, 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்றுடன் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 322 ஊராட்சிகளுக்கு, 69 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.
முன்னதாக, பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் உமா பார்வையிட்டார். பின்னர், கூட்டுறவு துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ₹88.97 லட்சம் கடனுதவிகள், வருவாய்த்துறை சார்பில் 391 பயனாளிகளுக்கு ₹3.91 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 169 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் என மொத்தம் 703 பயனாளிகளுக்கு ₹5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அட்மா தலைவர்கள் தங்கவேல், தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அருளரசு, ஆர்டிஓ சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாராயணன், உதவி இயக்குநர் (நில அளவை) ஜெயசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இளநிலை மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ், தாசில்தார் விஜயகாந்த் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.