*ரூ.4 லட்சம் பறிமுதல்
கோபி : கோபி அருகே மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட மாஜி எஸ்ஐ உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.4.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியகொடிவேரியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு சூதாட்டம் நடைபெறுவதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து எஸ்ஐ பரமேஷ்வரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விடுதியை கண்காணித்தனர். அப்போது உள்ளே சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சூதாட்ட கும்பல் தப்பியோடாமல் இருக்க தங்கும் விடுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட டி.என்.பாளையத்தை சேர்ந்த சவுந்திரராஜன் (31), கலிங்கியம் சின்னக்குளத்தைச் சேர்ந்தசேகர் (43), பகுத்தம்பாளையத்தை சேர்ந்த பிரபாகர் (36), கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரை சேர்ந்த சின்னசாமி (40), செரையாம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (50), நீலாம்பூரைச் சேர்ந்த தினேஷ் (32), மூனுகாட்டியூரை சேர்ந்த ரகுநாதன் (40), பவானி லஷ்மி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (64), டி.என்.பாளையம் நேரு விதியை சேர்ந்த விக்னேஷ் (32), கார்த்தி (30), சத்தியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த அப்துல் பஷீர் (38), பெருந்துறை மேக்கூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (58), அய்யம்பாளையத்தை சேர்ந்த ராயப்பன் (43), மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்த பார்த்தசாரதி (50), ஓடத்துறையைச் சேர்ந்த விஜயகுமார் (67), பெருந்துறை தோப்புபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (60) ஆகியோரை கைது செய்தனர்.
இக்கும்பலிடமிருந்து ரூ.4,12,530 ரொக்கம், 3 கார்கள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.இதில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பெருந்துறை ஹைவே பேட்ரோல் எஸ்ஐயாக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்பிறகு தனியார் விடுதியில் மேலாளராக பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது. ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்ஐ உள்பட 16 பேர் சூதாட்டத்தில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.