சிவகங்கை, ஆக. 24: சிவகங்கையில் கஞ்சா விற்ற இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை சிவகங்கை எல்லையில் தொண்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (54), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராமர் (64) ஆகிய இருவரையும் சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சிவகங்கை நகர் பகுதியில் விற்பதற்காக அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன், ராமர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.