கோவை, நவ.20: 16வது ஈஷா கிராமோத்சவத்தையொட்டி ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழா தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த 16 மற்றும் 17ம் தேதி நடைபெற்றது. இதில் கிராமங்களுக்கு இடையேயான வாலிபால், த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் 70 இடங்களிலும், த்ரோபால் போட்டிகள் 24 இடங்களிலும் நடைபெற்றது.
இதில் 6 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 30 ஆயிரம் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டிகளில் 22,522 வீரர்களும், த்ரோபால் போட்டிகளில் 5,098 பெண்களும் போட்டிகளில் விளையாடினர். இந்தப் போட்டிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகள் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும். இதைத்தொடர்ந்து தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு டிசம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.