புதுடெல்லி: காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் கலப்பு மருத்துகள் உட்பட 156 மருந்துகளுக்கு ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. எப்டிசி மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையைக் கொண்டவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்றும் அழைப்பர். இந்நிலையில், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, குறிப்பிட்ட சில வகை மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அசித்ரோமைசின் உடன் அடபலீன் என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் முகப்பரு தழும்புகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்த கலவையை தற்போது ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. இதேபோல், அசெக்ளோஃபெனாக் மற்றும் பாராசிட்டமால் கலவையாக கொண்ட 156 மருந்து, மாத்திரையையும் இனி விற்பனை செய்ய முடியாது. ஒன்றிய அரசின் இந்த முடிவால் சிப்லா, லுபின், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் சில மாத்திரைகளின் உற்பத்தி குறைக்கப்பட இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டும் ஒன்றிய அரசு 360 எப்டிசி எனப்படும் நிலையான கலவை மருந்துகளுக்கு தடை விதித்திருந்தது. இதனால் அப்போதே சில நிறுவனங்களின் மருந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.