ராமேஸ்வரம், ஆக.14: இலங்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா, பீடி இலை, போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் வாடிக்கையாக மாறி விட்டது. இவ்வாறு தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்படும் கடத்தல்களை அந்நாட்டு கடற்படை மற்றும் போலீசார் தினசரி கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் தென்னை தோப்பு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தலைமன்னார் போதைப்பொருள் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சோதனை செய்ததில், 70 பார்சல்களில் 156 கிலோ கேரளா கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.