சென்னை: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி அருண் பதவியேற்ற 56 நாட்களில் கொடுங் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஏ பிளஸ் ரவுடிகள் உள்பட 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் ேததி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படை மூலம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேநேரம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை திட்டமிட்ட படுகொலை என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொலை குற்றவாளிகளை கைது செய்ய தவறியதாக, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய அருண் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக கடந்த ஜூலை 8ம் தேதி நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்புடைய கூலிப்படை தலைவன் உள்பட இதுவரை 27 குற்றவாளிகள் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுபடி கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூலிப்படை தலைவன் திருவேங்கடம் என்கவுன்டரும் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற முதல் நாள், ‘சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி என்றும், ‘ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரியவைப்போம்’ என ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை அவர் ேமற்கொண்டு வருகிறார். மேலும், பெருநகர காவல்துறையில் உள்ள 104 காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருப்பிடங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிந்தார். அதன்படி இன்ஸ்பெக்டர்கள் ஏ பிளஸ், ஏ மற்றும் பி, சி கேட்டகிரியாக வகைப்படுத்தி ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் ெசன்று உறுதிப்படுத்தினர்.
கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளில் பலர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கூடுதல் டிஜிபி அருண் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 56 நாட்களில் பிரபல ரவுடிகள் உள்பட 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஏ பிளஸ் மற்றும் ஏ கேட்டகிரியை சேர்ந்த 31 ரவுடிகள், 86 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் அடங்குவார்கள். மேலும், கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 32 குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் அடங்குவார்கள்.