*அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருப்பூர் : 15 வேலம்பாளையத்தில் ரூ.47.56 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை 86 படுக்கைகளில் இருந்து 100 படுக்கைகளாக தரம் உயர்த்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையத்தில் ரூ.47.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சி 15-வேலம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வருகிற மருத்துவமனையின் கட்டிடப்பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனையானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.47.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனை 86 படுக்கை வசதிகளுடன் 3 தளங்களை கொண்டு பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. தரை தளத்தில் எக்ஸ்ரே, வெளிப்புற நோயாளிகள் பிரவு. சி.எஸ்.எஸ்.டி ஆய்வகம் முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, என்.ஐ.சி.யூ. மகப்பேறு பிரிவுகளும் 2ம் தளத்தில் பிரசவ முன் மற்றும் பின் கவனிப்பு பிரிவு. கூட்ட அரங்கு, அலுவலகம், 3ம் தளத்தில் டயாலிசிஸ் பயிற்சியாளர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகளும், மகப்பேறு பிரிவு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான பிரிவு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த மருத்துவமனைக்காக 44 பேர் கொண்ட ஊழியர்கள் மிக விரைவில் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் ஆகியோர் 86 படுக்கைகளை 100 படுக்கைகளுடன் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த மருத்துவமனை கட்டமைப்பை உயர்த்த வேண்டுமென்பது அவசியமாக உள்ளது. மிக விரைவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.செப்டம்பர் மாத 3வது வாரத்தில் மருத்துவமனை முழுப்பணிகளும் முடிக்கப்பட்டு இந்த பிரம்மாண்டமான மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை அரசு பொறுப்பேற்றவுடன் ஏராளமான துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடங்களும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் 23 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் பி.சி.ஆர். லேப் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல், திருப்பூர் மாநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிட பணிகளும் நிறைவுற்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டு பெரிய அளவிலான பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்றும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை ஒன்றும் வேண்டுமென அமைச்சர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தாராபுரத்தில் ரூ.24.00 கோடி மதிப்பீட்டில் அங்கு இருக்கும் வட்டார மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், காங்கயத்தில் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அவிநாசியில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. உடுமலைப்பேட்டை அடுத்துள்ள ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களை காட்டிலும் திருப்பூர் மாவடத்தில் 24 ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையங்களை பொறுத்த வரை கோவில் மேடு, நாரணாபுரம், இளவந்தி, துலுக்கமுத்தூர். பெரியபட்டி, ஆதியூர், குள்ளம்பாளையம் காமராஜ் காலனி, அங்கேரிபாளையம் கிழக்கு, ரோஜா நகர், பாபுஜி நகர், சாமிநாதபுரம், சந்திராபுரம், டி.எம்.எஸ் நகர், வி.ஆர்.பி நகர், சபாபதிபுரம், மூகாம்பிகை நகர், மடத்துப்பாளையம், காளிபாளையம் ஆகிய இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் 44 புதிய மருத்துவத்துறை சம்பந்தமான கட்டிடப்பணிகள் ரூ.112.21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.மேலும், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 39 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமையும் என முதல்வர் அறிவித்தார். நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் பொருத்தவரை ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர்.
ஒரு உதவியாளர். என்று 4 பணியிடங்களோடு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு திருப்பூர் மாநகராட்சிக்கு 34, தாராபுரம் நகராட்சிக்கு ஒன்றும், உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு ஒன்றும், பல்லடம் நகராட்சிக்கு ஒன்றும், அவிநாசி பேரூராட்சிக்கு ஒன்றும், திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு ஒன்றும் என அறிவிக்கப்பட்டு அதில் பணிகள் முடிவுற்று கடந்த ஆண்டு 27 இடங்களில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 இடங்களில் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படுகிறது.
மேலும், படியூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாராபுரம் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகளும் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார் இந்த ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்). உமா மகேஸ்வரி (1-ம் மண்டலம்), தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குநர் ராமசாமி, சுகாதார அலுவலர் முரளி சங்கர். மாநகர நல அலுவலர் கௌரி சங்கர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணி, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், உசேன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், அனுசியா தேவி, செல்வராஜ் மற்றும் தெற்கு மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.