நன்றி குங்குமம் தோழி
ஒரு விசேஷம் என்றால் பெண்கள் முதலில் யோசிப்பது என்ன உடை அணியலாம் என்பதுதான். தற்போது ஒவ்வொரு விசேஷத்திற்கும் தனிப்பட்ட உடைகளை தேர்வு செய்து அதனை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தி டிசைன் செய்ய விரும்புவது புடவைகளுக்கு அணியக்கூடிய பிளவுஸ்களைதான்.
குறிப்பாக ஆரி மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்களையே இவர்கள் பெரும்பாலும் அணிய விரும்பு கிறார்கள். வீட்டில் நடக்கக்கூடிய சின்ன பங்ஷன் முதல் திருமணம் வரை உடைகளில் ஆரி வேலைப்பாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காகவே உசிலம்பட்டியில் பிரத்யேகமாக பெண்களை கொண்டு பொட்டிக் கடையினை நடத்தி வருகிறார் உமா.
‘‘2013ல், எங்க ஊரில் துணிக்கடை ஒன்றை நான் நடத்தி வந்தேன். கடை நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. பல ஊர்களுக்கு எக்ஸ்போட்டும் செய்து வந்தோம். ஆனால் கொரோனா தொற்றின் காரணத்தால் பிசினஸ் கொஞ்சம் டல்லானது. நினைத்த மாதிரி லாபம் பார்க்க முடியல. மேலும் நான் துணிக்கடை துவங்கும் போதே கஷ்டப்படும் பெண்களை தான் என் நிறுவனத்தில் வேலைக்காக அமர்த்தி இருந்தேன். கொரோனாவிற்கு பிறகு பலரின் நிலைமை மாறிடுச்ச.
அதனால் கண்டிப்பா கஷ்டப்படும் பெண்களுக்கு வேலை கொடுத்தே ஆகவேண்டும் என முடிவு செய்து ஆரம்பிச்சதுதான் இந்த உமா பொட்டிக். நான் பொட்டிக் ஆரம்பிச்ச நேரத்தில்தான் ஆரி மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் எல்லாம் டிரெண்டில் இருந்தது. ஆனால் எங்க ஊரில் பெரிய அளவில் இந்த டிசைன்கள் எல்லாம் கிடையாது. ெசால்லப்போனால், உசிலம்பட்டியில் முதன் முதலில் இது போன்ற பொட்டிக்கினை துவங்கியது நான்தான்னு பெருமையா சொல்லிக் கொள்வேன்’’ என்ற உமா, இந்த பொட்டிக் ஆரம்பித்ததற்கான காரணத்தை குறிப்பிட்டார்.
‘‘எனக்கு ஏற்கனவே துணிக்கடை நடத்திய அனுபவம் இருந்ததால், அதில் என்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள தையல், ஆரி, எம்பிராய்டரி போன்ற கை வேலைகளை எல்லாம் கற்றுக் கொண்டேன். மேலும் என்னைப் போல் இந்த கை வேலைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள பெண்களுக்கும் இதனை கற்றுத் தருகிறேன். மூன்று மாதம் முழுமையாக பயிற்சி எடுத்த பிறகு அவர்களை நான் என் பொட்டிக்கில் வேலையில் சேர்த்துக் கொள்கிறேன். இப்போது எங்களிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் குடும்பச்சூழலால் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அபலைப் பெண்கள்.
பொதுவாக சிம்பில் ஆரி வேலைப்பாடு கொண்ட பிளவுசின் விலை மற்ற டிசைனர் பிளவுஸ்களை விட அதிகம். ஒரு பிளவுஸ் தயாரிக்க இரண்டு பேர் அவசியம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சம்பளம் மற்றும் லாபம் என்றால் அதன் விலையும் நான் அதிகமாகத்தான் நிர்ணயிக்க வேண்டும். நான் அப்படி செய்வதில்லை. பிளவுசுக்கான லாபம் வைத்தாலும் நியாயமான விலையில்தான் அதனை செய்து தருகிறேன். என்னைப் பொறுத்தவரை கஷ்டப்படும் பெண்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதனால் முடிந்த அளவிற்கு என்னுடைய ெபாட்டிக்கில் பெண்களை வேலைக்காக நியமித்து இருக்கிறேன்.
இதனால் வரும் ஆர்டர்களை எங்களால் சரியாகவும் குறிப்பிட்ட ேநரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிகிறது. அதனால் ஆர்டர்களும் அதிகமாக வருகிறது. இதனால் ஒரு பிளவுசுக்கு நிர்ணயிக்கும் விலையினை ஐந்து பிளவுசிற்கு பிரித்து கொடுக்கிறோம். விலை குறையும் போது ஆர்டர்களும் நிறைய வரும். அதனால் எங்களால் மற்ற கடைகள் பெறும் அதே லாபத்தினை ஈடு செய்ய முடிகிறது. எங்க ஊர் மட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆன்லைன் முறையில் ஆர்டர்கள் வருகிறது’’ என்றவர் ஆன்லைன் பிசினஸ் குறித்து விவரித்தார்.
‘‘தற்போது பிசினஸ் முன்பு போல் இல்லை. பெரும்பாலானவர்கள் ஆன்லைன் முறையில்தான் பிசினஸ் செய்கிறார்கள். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். காரணம், இருக்கும் இடத்தில் இருந்தே வேலை முடிகிறது. நேரமும் மிச்சமாகிறது. உலகில் எங்கிருந்து வேண்டும் என்றாலும், பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியும். நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். ஆனால் எனக்குள் இருக்கும் திறமை மற்றும் ஆர்வம்தான் என்னால் என் தொழிலை திறம்பட செய்ய முடிகிறது. அதற்கு முக்கிய காரணம் விடா முயற்சி மற்றும் எனக்கான ஒரு தொழிலை துவங்கி சாதிக்க வேண்டும் என்பதுதான்.
பிசினஸ் விரிவடையும் போது அதற்கான ஆட்களும் அவசியம் என்பதால், மேலும் பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் எண்ணம் உள்ளது. அடுத்து கோவிட் காலத்தில் மூடப்பட்ட என்னுடைய துணிக் கடையினை மீண்டும் துவங்கும் எண்ணம் உள்ளது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கும் பெண்களை வேலைக்கு நியமிக்க இருக்கிறேன்.
சில பெண்கள் வெளியூர்களில் இருந்து வேலைக்காக வருவார்கள். அவர்கள் தங்குவதற்கு விடுதி போல் அமைக்க இடம் பார்த்து வருகிறோம். எல்லாம் நான் நினைத்தபடி நடந்தால், சீக்கிரமே எங்களின் துணிக்கடையையும் உசிலம்பட்டியிலேயே துவங்குவோம்’’ என்று புன்னகைத்தபடி கூறினார் உமா.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்