*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகள் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நீர்நிலைகள் பராமரிப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார்.
பின்னர், கலெக்டர் துர்காமூர்த்தி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், நீர்வளத்துறை, ஊராட்சித்துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மூலம் 855 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 15 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 21 குளங்கள் 75 சதவீதத்திற்கு மேலும், 39 குளங்கள் 50 சதவீதத்திற்கு மேலும், 243 குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழ், 372 குளங்கள் 25 சதவீதத்திற்கு குறைவாக நிறைந்துள்ளது.
அணைகள் மற்றும் ஏரிகளின் கதவுகள் மற்றும் மதகுகள் சரிசெய்து சரிவர இயங்குதல் குறித்து உறுதி செய்ய வேண்டும். வெள்ளநீர் வடிகால்களில் மிதக்கும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றவேண்டும். வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பருவமழையினை எதிர்கொள்ளும் பொருட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளவேண்டும்.
சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்காதவண்ணம் மழைநீர் வடிகால்களை தூர்வாரி, மழைநீர் தங்கு தடையின்றி வடிய, மண்டல அளவில் சிறப்பு செயல்திட்டம் தயார் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நீர் இருப்பு குறைவாக உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து உறுதி செய்ய, வரத்து கால்வாய்களில் உள்ள முட்செடி இதர தாவரங்களை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து, வெள்ள தடுப்புக்கு தேவையான மணல் மற்றும் தளவாடப் பொருட்கள், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில், 24 மணி நேரமும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேறுவதை கண்காணித்து, உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில், பணிகளை விரைவாக முடிக்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குணா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பிரபாகரன், உதவி ஆணையர் ராஜேஷ்குமார் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


