Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் பலி

*சிறுத்தை நடமாட்டம் என கிராம மக்கள் பீதி

ஆரணி : ஆரணி அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 15 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. அந்த ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றிருக்கலாம் என கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(59), விவசாயி. இவர் மலைப்பகுதி அருகே உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும், 25க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

கடந்த 26ம் தேதி வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, அன்றிரவு தனது நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்தார். மறுநாள் காலை நிலத்திற்கு சென்றபோது, கொட்டகையில் இருந்த 15க்கும் மேற்பட்ட ஆடுகள் தலை, கழுத்து என பல இடங்களில் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வெட்டியாந்தொழுவம் கால்நடை மருத்துவர் சங்கீதா, விஏஓ பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். மேலும், தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வந்து விசாரித்தனர்.

அதில், மலைப்பகுதியையொட்டி கொட்டகை இருப்பதால் மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் சங்கீதா தலைமையிலான மருத்துவ குழுவினர், பலியான 15 ஆடுகளையும் உடற்கூறு ஆய்வு செய்து, விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி புதைத்தனர். மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியான சம்பவம் கிராம மக்கள் இடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முள்ளண்டிரம் கிராம மக்கள் கூறியதாவது:முள்ளண்டிரம் கிராமத்தை சுற்றி மலைப்பகுதி உள்ளது. இதனருகில் வெட்டியாந்தொழுவம் காப்புக்காடு உள்ளதால் மர்ம விலங்குகள் அதிகளவில் வெளியேறி கிராமத்தில் சுற்றித்திரிகிறது. அதேபோல், சிறுத்தையின் நடமாட்டமும் இருந்து வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் இங்கு சிறுத்தை நடமாட்டம் எதுவும் இல்லை என்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் கொட்டகையில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போனது. மேலும், 27ம் தேதி 15 ஆடுகள் கடித்து கொல்லப்பட்டுள்ளது. இதனை சிறுத்தைதான் வேட்டையாடியிருக்கும். எங்கள் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு, பகல் நேரங்களில் வீடுகள், நிலங்களுக்கு சென்று வர முடியாமல் அச்சமாக உள்ளது.எனவே, வனத்துறை அதிகாரிகள் முள்ளண்டிரம் கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கு எதுவென கண்டறிந்து அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.