திருவொற்றியூர்: திருவொற்றியூர் கார்கில் நகரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (19), ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து உள்ளார். இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வரவே இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை கார்கில் நகரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் கார்கில் நகர் பகுதிக்கு சென்று 14 வயது சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை ராயபுரத்தில் உள்ள வடக்கு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்து குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், கடந்த 20ம் தேதி கார்கில் நகர் பகுதியில் விக்னேஷ் (24) என்பவர் 17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரித்து வருகின்றனர்.