திருவொற்றியூர், அக். 6: ரவுடி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்பவர் கடந்த 2006ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டையார்பேட்டை போலீசார் 7 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதில் ஈஞ்சம்பாக்கம் கவுரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணாகரன் (45) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. பின்னர் மீண்டும் சிறைக்குச் செல்லாமல் கடந்த 14 வருடங்களாக கருணாகரன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இதனையடுத்து, உதவி ஆணையர் ராயப்பன் ஏசுநேசன், ஆய்வாளர் தர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கருணாகரனை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே கருணாகரன் அடிக்கடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்படி வந்தபோது தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கருணாகரனை கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஈஞ்சம்பாக்கம், கோவளம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த கருணாகரன், தற்போது கடந்த 4 ஆண்டுகளாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாகவும், பிளம்பராகவும் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளான்.
வேலை விஷயமாக அடிக்கடி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தபோதுதான் போலீசாரின் பிடியில் கருணாகரன் சிக்கியுள்ளான்.
கைதான கருணாகரனை தண்டையார்பேட்டை போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் தண்டையார்பேட்டை ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கைதான ஆயுள் தண்டனை குற்றவாளி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.